×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

சுத்திகரிப்பின் சூட்சுமம்

கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும்புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கியமான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார். பொதுவாக நாம் என்ன செய்வோம்? களைப்பும் சோர்வும் உள்ளபோது சிறிது ஓய்வு அல்லது தூக்கம் தேவையாகிறது. அதுவே மேலும் முக்கிய வேலைகள் இருந்தால். ஒரு குளியல் நம்மை புத்துணர்ச்சி கொள்ளச்செய்கிறது.

இன்னொரு உதாரணம், ஒரு குழந்தை தனக்கு ஒவ்வாத உணவை அல்லது செரிமானம் ஆகாத ஒன்றை உண்டுவிடுகிறது. தூங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் அவதியுறுகிறது. சிறிது நேரத்தில் அந்த உணவு வாந்தியாக வெளியேறுகிறது, அடுத்த சில மணித்துளிகளில் அந்த குழந்தை ஆழ்ந்து உறங்கத்தொடங்கி விடும். உலகம் முழுவதுமே செய்யப்பட்ட ஆய்வுகளில், மனிதர்கள் மலம் கழித்த உடன் மிகப்பெரிய ஆசுவாசமான ஒரு உணர்வை அடைகிறார்கள். மன இறுக்கம் தளர்ந்து ஒரு ஓய்வான நிலைக்கு செல்கிறார்கள். மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரும்பாலும் அதீத கோபம், பயம், எரிச்சல் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்துகிறார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலே சொன்ன அனைத்தும், முக்கியமான ஒன்றை நமக்கு சுட்டுகிறது, அது, ‘சுத்திகரிப்பு’.நாம் நம்மை உள்ளும் புறமும் சுத்திகரிக்கும் பொழுது, புதிதாக ஏதோ ஒன்றை அடைகிறோம், பழைய ஒவ்வாத ஏதோ ஒன்றை விடுகிறோம்.இவ்வகை சுத்திகரிப்புகளுக்கு யோகமரபில் ‘ஷத்கர்மா’ என்று பெயர், ஆறுவகை சுத்திகரிப்பு. ஆயுர்வேதம் இதை ‘பஞ்சகர்மா’ என்கிறது உலகம் முழுவதும் இன்று ஆயுர்வேதம் இந்த முறையால் அறியப்படுகிறது.

நாம் நுகர்வது அனைத்தும், வளர்ச்சிக்கு, இட்டுச்செல்கிறது, வளர்ச்சிகள் அனைத்தும், நஞ்சையும், கழிவுகளையும் விட்டுச்செல்கிறது, இது நம் சுற்றுச்சூழலில் நிகழ்வது மட்டுமன்று, நம் உடல், புலன்கள், மனம், புத்தி, ஆன்மா வரை இது தொடர்கிறது. ஆக சுத்திகரித்தல் என்பது இங்கே மேலோட்டமாக நிகழ்வது மட்டுமல்ல, பல தளங்களில் நிகழவேண்டியுள்ளது. அதற்கு யோகம் போன்ற தத்துவத்தையும் பயிற்சியையும் இணைத்து முன்வைக்கும் ஒரு மரபு. சத்கர்மா போன்ற முழுமையான ஒரு பாடத்திட்டத்தை முன்வைக்கிறது.

யோக மரபு சொல்லும் சுத்திகரிப்பு என்பது நாடிகள் வழியாக பிராணன் பாய்வதற்கு தடையாக உள்ள அனைத்துமே நஞ்சே, அந்த நஞ்சை நீக்கும் முறையே ‘ஷட் கர்மா’ எனும் ஆறுவகை சுத்திகரிப்பு முறை இது அனைவருக்குமானது, உடலால் ஆரோக்யமாக இருக்கும் ஒருவருக்கும் மனம், உணர்ச்சிகள், புலன் சார்ந்த, தளங்களில் இந்த நச்சுத்தன்மை இருக்கலாம். அவை நீண்ட காலமாக தேங்கி இருப்பதால், சிறிது சிறிதாக நமது அன்றாடத்தில் கலந்து நமது செயல்களில், சோர்வு உணர்ச்சிகளற்ற மரத்துப்போகும் தன்மை, சலிப்பு, விரக்தி என வெளிப்படும்.

உதாரணமாக மலச்சிக்கல் இருப்பவர்கள் ஒருவித எரிச்சலுடன் காணப்படுவது இயல்பு. அதுவே நெஞ்சில் கபம் கட்டி இருப்பவர்கள் சோர்வாகவும், செயலற்றும் இருக்கவே விரும்புவர். பெரும்பாலும் யோகம் என்பதை ஆசனங்கள் என்றும் சிறிது மூச்சுப்பயிற்சி என்றும் அல்லது தியானங்கள் என்றும் இன்று போதிக்கப்படுகிறது. மூலநூல்களும் சம்ஹிதைகள் எனப்படும் தொகுப்பு நூல்களும் முதலில் முன்வைப்பது ‘சுத்திகரிப்பு’ முறையைத்தான்.

ஒருவர் மூச்சுப்பயிற்சி செய்து தன்னுடைய பிராணனை உயர்த்திக்கொள்ள நினைத்தால், அவர் முதலில் நாடிகளை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. அப்படி சுத்திகரிக்கப்பட்ட நாடிகள் வழியாக பிராணன் பாயும்பொழுது, மிகச்சரியான மற்றும் தேவையுள்ள பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. நாடிகள் அசுத்தமாக உள்ளபோது பிராணன் செல்வதில் தடை உண்டாவதால், அவர் பலவருடங்கள் செய்யும் பிராணாயாமம் சிறிது பலனை மட்டுமே தருகிறது. அதிலும் சுவாச மண்டலத்தில் தேங்கியிருக்கும் சளி போன்ற நச்சுத்தன்மை பிராணாயாமம், ஆசனம் போன்ற பயிற்சிகள் தரும் பலனை குறைத்துவிடும், ஆகவே யோகமரபு இந்த ஆறுவகை பயிற்சிகளில் ஒன்று இரண்டையாவது நமது பயிற்சிகளில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

முதல் பயிற்சிக்கு ‘நேத்தி’ என்று பெயர். இது மூக்கின் வழியாக இளஞ்சூடான உப்பு நீர் அல்லது ஒரு மெல்லிய ரப்பர் கயிறு ஒன்றை செலுத்தி மறு நாசித்துவாரம் வழியாக வெளியேற்றும் பயிற்சி. இதில் ஒவ்வொரு யோகப்பயிற்சியும் சில பிரத்தியேகமான முறையை கொண்டுள்ளது. இவ்வகை பயிற்சிகள் தொண்டை, மூக்கு, காதுகள், கண்கள் என கழுத்துக்கு மேல் உள்ள புலன்களை சுத்திகரிக்க உதவும் மிக முக்கியமான பயிற்சியாக முன்வைக்கப்படுகிறது. மற்ற ஐந்து கிரியைகளையும் செய்ய வாய்ப்பு இல்லாத போதும் ஒருவர் இதையாவது முறைப்படி கற்றுக்கொண்டு பலனடையலாம்.

அடுத்ததாக ‘தவ்த்தி’ எனும், முயன்று வாந்தி எடுக்கும் முறை. இது வமன சிகிச்சை எனும் ஆயுர்வேத முறைக்கு அணுக்கமான ஒன்று, வாய் பகுதியில் தொடங்கி செரிமான உறுப்பு மண்டலம் வரையான பகுதிவரை குடலையும் ,வயிற்றையும் சுத்திகரித்தல். இரண்டு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை நீரை சிறிது சிறிதாக குடித்து கைவிரலால் உள்நாக்கை அசைத்து அந்த நீரை வெளியேற்றும் வாந்தி முறை சிகிச்சை. இந்த பயிற்சிக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய அடிப்படை பயிற்சிகளை செய்துவிட்டே இதை தொடங்கவேண்டும்.

அடுத்தது ‘ நவ்லி’ எனப்படும் வயிற்று தசைப்பகுதிகளை மட்டும் குறிப்பிட்ட விதத்தில் மேலும் கீழுமாகவும் இடவலமாகவும் அசைத்தல் அல்லது சுழற்றுதல், சிறுகுடல், பெருங்குடல் வயிறு மற்றும் சிறுநீரக மண்டலத்தை சுத்திகரிக்கும் முறை. இது பொதுவானவர்களுக்கான பயிற்சியாக முன்வைக்கப்படவில்லை. நீண்ட யோக சாதனையின் மூலம் வயிற்று தசைப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தபின் செய்யவேண்டியது.

அடுத்ததாக, ஆயுர்வேதத்தில் முக்கியமான சிகிச்சை முறையான வஸ்தி எனப்படும் ஆசனவாய் வழியாக மருந்து செலுத்தி குடல்வால் வரை சுத்திகரிக்கும் முறையை போன்ற ‘பஸ்தி’ எனும் யோக சுத்திகரிப்பு முறை. இது இடுப்பளவு நீரில் அமர்ந்து செய்யவேண்டிய ஒரு சிகிச்சை முறை, இன்று இது ஒருசில குருகுலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் போதிக்கப்படும் முறையாக நீடிக்கிறது.

அடுத்து ஓரளவு பரிட்சயமான ‘கபாலபத்தி பிராணாயாமம்’ எனும் மூச்சுப்பயிற்சி முறை. கபாலம் என்பது நமது தலையையும் முக்கியமாக நெற்றிப்பகுதியையும், ‘பத்தி’ என்பது ஒளிரச்செய்தல் எனும் அர்த்தத்தில், மூளையின் கதுப்புகளை ஒளியை போல பிரகாசமாக மாற்ற, செய்யவேண்டிய சுத்திகரிப்பு முறையாக இது நெடுங்காலம் இருந்து வருகிறது. ஆறாவதாக ‘த்ராடகா’ எனும் ஒன்றை கூர்மையாக உற்று நோக்கும் பயிற்சி, ஒரு தீபச்சுடர், ஒரு புள்ளி, உருவம் என ஏதேனும் கண்களை இமைக்காமல் ஒன்றை தொடர்ந்து உற்று நோக்கி செய்யக்கூடிய அடிப்படை தியான பயிற்சி. அதே வேளையில் தியானம் என்றும் சொல்லிவிட முடியாது.

ஒருவகையில் தியானத்திற்கான தயாரிப்பு நிலை என சொல்லலாம்.இந்த ஆறுவகை சுத்திகரிப்பும், முன்னும் பின்னும் செய்யவேண்டிய பயிற்சிகளை கொண்டது, நேரடியாக இவற்றை ஒருவர் தொடங்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது, ஆகவே இவற்றை ஒரு குருநிலை அல்லது ஆசிரியருடன் சில நாட்கள் தங்கி சிலமுறை அவர்முன்னர் செய்து காண்பித்து பின்னர் தொடரலாம். உலகியல் சார்ந்த விஷயத்தில் உழன்று கொண்டிருந்துவிட்டு, மீண்டும் ஒருவர் சாதனா எனும் தீவிர பயிற்சிகளை செய்ய தொடங்கும் பொழுது இவற்றில் ஏதேனும் சில சுத்திகரிப்பு பயிற்சிகளை செய்து விட்டு மேலே பயணிக்கலாம்.

சந்தோலன் ஆசனம்

இந்த பகுதியில் நாம் சந்தோலன் ஆசனம் எனும் பயிற்சியை காணலாம். உடல் மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகப்பெரிய சமநிலையை கொண்டுவரும் இந்த பயிற்சியை மார்ஜரி எனும் பூனை நிலை பயிற்சியில் தொடங்கி, படிப்படியாக உடலையும், மூட்டுப்பகுதியையும் மேல்நோக்கி உயர்த்தி இறுதிநிலையில் தலையை உயர்த்தி மூன்று அல்லது ஐந்து மூச்சுகள் வரை நிலைத்திருக்கலாம். பின்னர் மார்ஜரி நிலைக்கே வந்து விடவும். ஐந்து முதல் ஏழு சுற்றுகள் வரை முயற்சி செய்யவும்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Yoga ,Selandararajan.ji ,Dinakaran ,
× RELATED நிஷ்கல யோகம் என்னும் புதையல் யோகம்